Posted by : Guna Sunday, November 16, 2014

வடக்கு ஆண்டித்தோப்பு CSI ஆயர்மண்டல சபை வரலாறு
இந்தியத் திரு நாட்டின் தென்முனையில் அமைந்துள்ள சிறிய அழகிய இயற்கை வளம் கொழிக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. இம்மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தோவாளை வட்டத்தின் தலைநகராம் பூதப்பாண்டிக்கு கிழக்கே பழையாற்றுக்கு மேற்கே தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் தான் ஆண்டித்தோப்பு ஆகும். இவ்வூரின் நடுவே செல்லும் ஆரல்வாய்மொழி நெடுமங்காடு சாலை இச்சிற்றூரை வடக்கு தெற்கு என்று பிரிக்கிறது.
இங்கு பெரும்பான்மையாக இரண்டு சமுதாயங்கள் காலாகாலமாக வாழ்ந்து வருகின்றனர். பண்டைய திருவாங்கூர் இராஜ்ஜியத்தில் உயர்ந்த ஜாதி மக்கள் என்று சொல்லிகொண்டிருந்த இழி பிறவிகளும் மனிதத்தன்மை சிறிதும் இல்லாத காட்டுமிராண்டிகளுமான அந்த நவீன காட்டுவாசிகளிடம் சிக்கி சீரழிந்த நாடார்களும் தாழ்த்தப்பட்ட மக்களுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இத்தகைய மக்களின் இறை வேண்டுதலும் மன்றாட்டுக்களும் இறைவனின் சமூகத்தை சென்றடைந்ததால் அத்தகைய இழிநிலையை மாற்ற இறைவன் இயேசுவின் அருளால் 1806 ஆம் வருடம் தரங்கம்பாடி மிஷனானது, ஜெர்மானிய இளம் இறைதூதரான திரு. வில்லியம் தொபியாஸ் றிங்கல் தொபே அவர்களை மயிலாடிக்கு அனுப்பியது. மயிலாடியில் தங்கி சுவிசேஷத்தை பரப்பிய றிங்கல் தொபே  அவர்கள் மயிலாடி, தாமரைகுளம், ஈத்தாமொழி, ஜேம்ஸ்டவுன் (பிச்சைக்குடியிருப்பு), கோயில்விளை, புத்தளம், சீயோன்புரம்(ஆத்திக்காடு) போன்ற குமரி மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள 7 இடங்களில்  சபைகளை ஸ்தாபித்தார்.
அவரது சுவிசேஷத்தின் பலன் நேரிடையாக ஆண்டித்தோப்பு கிராமத்தவற்கு கிடைக்காமல் போனாலும் புனிதமான அத்தென் திசைக்காற்று வடக்கு நோக்கி வீசத்தொடங்கியது. அப்போது ஆண்டித்தோப்பில் வசித்த திரு. ஆண்டிநாடார்  மகனான திரு
கூட்ட்ங்குட்டி நாடார்  அவர்களின் குடும்பம் இயேசுவின் அன்பை கேள்விப்பட்டு 1820- ஆம் ஆண்டு வாக்கில் கிறிஸ்தவத்தை தழுவியதாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், தனிநபர்களின் குடிசை வீடுகளில் ஜெபித்து வந்த விசுவாசிகள் இறைவனைத் தொழுது வழிபட ஒரு ஆலயம் தேவை என்பதை உணர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.இடைவிடாத முயற்சியின் பலனாக றிங்கல் தொபேக்கு பின்னர் அப்பணியை நாகர்கோவில் பகுதியில் தொடர்ந்து செய்து வந்த Rev. சார்லஸ் மீட் ஐயர் கி.பி.1845 – ஆம் ஆண்டு, தற்போது தெற்கு ஆண்டித் தோப்பு CSI ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு சிறிய ஆலயத்தை பனை ஓலைக்கூரை வேய்ந்த ஆலயமாகத் தொடங்கி வைத்துள்ளார். ஆண்டித்தோப்பு சபை வரலாற்றின் அடிப்படையில் பார்க்கும் போது கி.பி.1895 – ஆம் ஆண்டுவரை ஆண்டித்தோப்பில் ஒரே ஒரு ஆலயம் மட்டும் இருந்ததற்கான ஆதாரங்களே உள்ளன.
கி.பி.1859-ஆம் ஆண்டு நாகர்கோவில் வந்த திரு. ஜேம்ஸ் டதி அவரது மனைவி திருமதி. லீயா டதியும் திருமதி. மால்ட் மற்றும் திருமதி. சார்லஸ் மீட் போன்றவர்கள் நாகர்கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியை திறம்பட நிர்வகித்து வந்தனர். கி.பி. 1869 – ஆம் ஆண்டு திருமதி. லீயா டதி அவர்கள் திட்டுவிளையில் ஒருப்பள்ளியும். ஆண்டித்தோப்பில், தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு பெண்கள் பள்ளியும் ஆரம்பித்ததாகவும் அப்பள்ளியில் 17 மாணவிகளும் 55 மாணவர்களும் அப்போது பயின்றதாக 1869 ஆம் ஆண்டிற்கான TDC  திட்டுவிளை மிஷன் ரிப்போர்ட், பக்கம் 14 மூலம் தெரிய வருகிறது.
இப்பள்ளி முதலில் தற்போதைய வடக்கு ஆண்டித்தோப்பில், தற்போதைய ஆலயம் இருக்கும் இடத்தில் கி.பி. 1895 ஆம் ஆண்டுவரை செயல்பட்டுள்ளது. அதே வேளையில், தெற்கு ஆண்டித்தோப்பில் இருந்த பனை ஓலை ஆலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதாலும் வேறு சில உள் பிரச்சனைகளாலும் வடக்கு ஆண்டித்தோப்பில் புதியதாக கி.பி. 1860 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு பனை ஓலை ஆலயம் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1910-ஆம் ஆண்டு சுமார் 54 குடும்பங்கள் வடக்கு ஆண்டித்தோப்பு திருச்சபையின் அங்கங்களாக இருந்துள்ளனர்.இவ்வாறுவடக்கு ஆண்டித்தோப்பில் 1920 ஆம் ஆண்டுவரை ஆலயமும் பள்ளியும் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
வடக்கு ஆண்டித்தோப்பு ஆலயத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் 8-8-1911 அன்று பொதுச் சபைக்கூடி, புதியதாக ஒரு பெரிய ஆலயம் கட்ட ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபையோரின் அயராத உழைப்பினாலும் கடவுளின் திருச்சித்தத்தாலும்12-2-1916 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் Rev.சிங்ளேயர் அவர்கள் தலைமையில் திரு. மலையப்பன் உபதேசியார் அவர்கள் முன்னிலையில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.1920 ஆம் ஆண்டு புதிய ஆலயப் பணி நிமித்தம் இட நெருக்கடி ஏற்பட்டதால், வடக்கு ஆண்டித்தோப்பில் இயங்கி வந்த பள்ளிக்கூடமும் பள்ளி சம்பந்தமான பதிவேடுகளும் தெற்கு ஆண்டித்தோப்பு ஆலயத்திற்கு மாற்றப்பட்டது.

முதன் முதலாக பனைஓலைக் கூரையை மாற்றி ஓடு வேய்ந்து
கட்டப்பட்ட ஆலையம்

இவ்வாலயம் கட்ட, Rev. சிங்க்ளேயர் அவர்கள் ஐம்பது பிரிட்டீஷ் ரூபாயும், 14-7-1921 ஆம் ஆண்டு Rev. பார்க்கர் மூலம் லண்டன் மிஷனிலிருந்து ஐம்பது பிரிட்டீஷ் ரூபாயும், நன்கொடையாகவும், குடும்பம் ஒன்றிற்கு  ஒன்பது பிரிட்டீஷ் ரூபாய் வரியாகவும் கூரை செய்வதற்கு  ஒவ்வொரு குடும்பத்திடமிருந்து ஒரு பனை மரம் நன்கொடையாகவும் பெறப்பட்டுள்ளது.
ஓடு வேய்ந்த பழைய ஆலயம், ஆண்டித்தோப்பில் வசித்து வந்த ஏழை ஆதிப்பிதாக்களின் விடா முயற்சியாலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும் முழுமையாகக்கட்டி முடிக்கப்பட்டு 13-11-1928 – ம் ஆண்டு 10 மணியளவில் குமரி அத்தியட்சாதீனத்தின் முதல் இந்திய சேகரத்துப் போதகரான Rev.ஜே.எம்.கேசரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாலயத்தில் , திரு மலையப்பன் உபதேசியார் 1913 முதல் 1930 வரை தொடர்ந்து 18 ஆண்டுகள் இறைப்பணி செய்தது சிறப்பாய் இச்சபையாரால் இன்றும் நினவு கூறப்படுகிறது.அது மட்டுமல்ல லண்டன் மிஷன் சங்கம் கடன்பட்டதென்று அறிந்து சபை குடும்பங்கள் குடும்பத்திற்கு ஒரு பணம் வசூலித்து அளித்ததும் சிறப்பாய் நினைவுக் கூறப்படுகிறது.
1947 ஆம் ஆண்டில் போதகர் இல்லம் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது திரு. கூட்டாங்குட்டி நாடார் வழித்தோன்றலாகிய திரு. முத்தையா அவர்கள் இனாமாக அளித்த இடத்தில்  போதகர் இல்லம் ரூபாய் 1569 யில் கட்டி முடிக்கப்பட்டு 17-10-1948 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின்னர் இப் போதகர் இல்லம் இடிக்கப்பட்டு 13-11-1993 அன்று டாக்டர். பென்சாம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ,புதியதாகக் கட்டப்பட்ட போதகர் இல்லம் 13-11-1994 அன்று பேராயர். G.கிறிஸ்து தாஸ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இடைக்காலத்தில் கட்டப்பட்ட 105 அடி 
உயர ஆலையக் கோபுரம்
சிறியக் கிளைச் சபையாக இருந்த இவ்வாலயம் 1-6-1960 முதல் ஆயர்மண்டல சபையாக தரம் உயர்த்தப்பட்டது. பழைய ஓடு வேய்ந்த ஆலயத்தின் முன்கோபுரப் பகுதிகள் பழுதுப்பட்டதால் புதிய ஆலயக் கோபுரம் கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு 13-11-1994 அன்று பேராயர். G.கிறிஸ்து தாஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட்து. 7-4-1996 ஆம் நாள் Rev.T.சுந்தர் ராஜ் அவர்களின் ஜெபத்தோடு கட்டிடப்பணி ஆரம்பிக்கப்பட்டு  சபையோரின் பெருமுயற்சியாலும் இறைவன் இயேசுவின் அருளாலும் 105 அடி உயர கோபுரம் செவ்வனே கட்டப்பட்டு 12 -4 – 1998 ஈஸ்டர் அன்று பேராயர்.M.I.கேசரி அவர்களால் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.
       இச்சபையின் அங்கத்தினர்களின் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்களில் பயன்படுத்துவதற்காக ஆலயத்தின் மூலம் வாங்கப்பட்டிருந்த சமையல் பாத்திரங்களை வைக்க இட நெருக்கடி ஏற்பட்டதால் பாத்திரங்களை வைப்பதற்கு வசதியாக போதகர் இல்லத்திற்கு வடக்கு பகுதியில்          31-3-2002 ஆம் ஆண்டு ஒரு பொருட்கள் அறைக் கட்டப்பட்டது.

தற்போதைய ஆலையத்தின் ஆல்டர் பகுதி

இந்நிலையில் இயேசுவின் அருளால் கட்டப்பட்ட ஓடு வேய்ந்த ஆலயம் பழையாற்றில் 1993-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பழுது பட்ட தாலும், அங்கத்தினர் களின் எண்ணிக்கை அதிகரித்து இட நெருக்கடி ஏற்பட்ட தாலும் புதியதாக நவீன தொழில் நுட்ப அடிப்படையில்  பெரிய ஆலயம் கட்ட வேண்டியதின் அவசியம் உணரப்பட்டது. ஆகவே 13-11-2003 அன்று ஒரு கட்டடக் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டியின் பெருமுயற்சியால் அழகான தற்போதைய பெரிய ஆலயம் கட்டப்பட்டு பேராயர்.G.தேவகடாட்சம் அவர்களால் 6-7-2006 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஆலையத்தின் ஆல்டர் பகுதியின் அழகிய தோற்றம்
ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக என்பது மோசேயின் மூலமாய் ஆண்டவர் நமக்கு அளித்தக் கட்டளை. ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்கக்கூடாது என்பது ஔவையின் மூதுரை. இதற்கிணங்க அழகான, சிறப்பான, எழில்மிகு ஆலயம் ஒன்றை ஆண்டித்தோப்பு என்னும் ஒரு சிறிய கிராமத்தில் கட்டி எழுப்ப இறைவனால் ஏவப்பட்டு, 1820 – ஆம் ஆண்டு முதல் இந்நாள் வரை சிறப்பான பணி செய்த, செய்து வருகின்ற அனைத்து மூப்பர்களையும் அனைத்து இந்திய போதகர்களையும், நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் நேரத்தில்;



ஆலையத்தின் ஆல்டர் பகுதியின் 
மற்றொருத் தோற்றம்
தன் சுயநலன்களை துறந்து  நாடு, சுற்றம், நட்புகளையெல்லாம் விட்டு விட்டு நம்மிடையே வந்து நோய் நொடிகளையும் உயர் ஜாதியினர் கொடுத்த தாங்கொணா துன்பங்களையும் நமக்காகத் தாங்கி தன்னலமற்ற சிறந்தப் பணி செய்த அயல் நாட்டு போதகர்களான Rev.றிங்கல் தொபே, Rev. சார்லஸ் மீட், Rev.சார்லஸ் மால்ட், Rev.சிங்ளேயர், Rev.பார்க்கர் , திரு.ஜேம்ஸ் டதி மற்றும் அவர்கள் தம் மனைவிமார்களையும் நினைவு கூறுவதும் சிறப்பிப்பதும் நமக்கு குறிப்பாக அடிமை தளைகளிலிருந்து விடுவிக்கப் பட்ட, மேலாடை அணிய உரிமை பெற்ற அனைத்து மக்களின் தலையாயக் கடமையாகும். 
                   


 இராகம் : மாசில்லா தேவப் புத்திரன்
பல்லவி

சபை நாளைக் கொண்டாடுவோம்  -

சபையோரே ஆடி பாடி மகிழ்ந்து – சபை நாளை

சரணங்கள்

1.      ஆதி பிதாக்களின் அடிமை தளை உடைத்தெறிய

நீதி தேவனின்  சுவிசேஷம் கொண்டு வந்த றிங்கல் தொபே

தீதில்லாப் பணி எண்ணி  - சபை நாளை

2.      மறை வேதமாணிக்கனார்  மயிலாடியில் பெற்ற அந்த

இறைவரந்தனை ஆண்டித்தோப்பும் பெற்றுக் கொள்ள செய்த

சார்லஸ் மீட் பணி எண்ணி – சபை நாளை

3.      மேலாடை குப்பாயமும் முழு வேஷ்டியும் நாம் அணிய

சால சிறந்த பணி செய்த அயல் நாட்டு போதகரை எக்

காலமும் நினைந்திட - சபை நாளை

4.      அறிவிலியாய் இருந்த முற்பிதாக்கள் நற்கல்வி பெற

பரிவாய் ஆண்டித்தோப்பிலே பெண் பள்ளி

ஆரம்பித்த லீயா டதியை எண்ணி - சபை நாளை

5.      புருஷாந்தார வரி ப்ரையாசிட்டம் கூரை வரி

திருமண வரி, தாலி வரி முருக்குத்தட்டி, தலைநார் வரி

கிறிஸ்தவம் மாற்றியதால் -- சபை நாளை

6.      வயலுடன் நம்மையும் அடிமைபோல விற்று வந்த

இழிவான நிலை நீங்கி மனிதராய் வாழச் செய்த

சுவிசேஷகரை எண்ணி – சபை நாளை

7.      ஆதிப்பிதாக்களால் பனைஓலைக்கூரையாய்

ஆரம்பித்த இவ்வாலையம் எழிலுற பணி செய்த

அறவோர்க்கு நன்றி சொல்ல – சபை நாளை

8.      பனை ஓலை ஆலயம் ஓடு வேய்ந்த ஆலையமாக

கனம் சிங்லேயர் ஐயர் செய்த அரும்பணிகள்
நினைந்து மனதாரப் போற்றிட – சபை நாளை

9.      பதினெட்டு ஆண்டுகள் ஆண்டிதோப்பு மாட்சியுற

கடின தடை உடைத்துழைத்த மலையப்பன்  போதகரின்

நெடிய பணி நினைந்து – சபை நாளை

10.  வாழிய வாழியவே சபையோர்கள் அனைவருமே 

வாழ்க முன்னுழைத்த போதகர் மூப்பர் பெருமக்கள்

வாழ்க என்று வாழ்த்த வேண்டி – சபை நாளை
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Gospel World - Skyblue - Powered by Blogger - Designed by Johanes Djogan -